இந்தியா - சீனா இடையே கடந்த வருடம் எல்லைப் பிரச்சனை காரணமாக மோதல் வெடித்தது. இதில், 20 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில், 45 பேர் வரை பலியானதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன.
சீனா, இந்தியாவிற்குச் சொந்தமான பகுதியில் ஊடுருவியிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையில், இந்தியா சீனாவோடு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து, பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில், இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொள்ளும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கை மூலமாக இந்தியாவின் பிரதேசத்தை, பிரதமர் சீனாவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டதாக ராகுல் காந்தி விமர்சித்தார். இதனைப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்தது.தற்போது இரு நாடுகளும் படை விலகல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, எல்லை படைக்குறைப்பைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் "தீர்க்கப்பட வேண்டிய புதிர். ‘சீன இராணுவம், உண்மை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியைக் கடந்து இந்தியாவின் பிரதேசத்திற்குள் நுழையவில்லை’ என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது. ஆனால் தற்போது, ‘இது அரசின் இராஜதந்திர வெற்றி. இந்தியப் பிரதேசத்திலிருந்து சீனா பின்வாங்கத் தொடங்கியுள்ளது’ என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகிறது. இரண்டும் உண்மையாக இருக்க முடியுமா?" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.