
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன் தினம் (07-04-25) தொடங்கியது. அப்போது, வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்து நோட்டீஸ் அளித்தன. இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால், ஆளும் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று கூச்சலிட்டு வருவதால் கடந்த 2 நாட்களாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜம்மி காஷ்மீர் சட்டமன்றத்திற்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏவை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமான மெஹ்ராஜ் மாலிக், இந்துக்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக பாஜக குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து, மாலிக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ விக்ரம் ரந்தவா தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று (09-04-25) ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூடியது. இதில் பங்கேற்பதாக வந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மெஹ்ராஜ் மாலிக்கை, சட்டமன்றத்திற்கு வெளியே பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு மோதல் வெடித்து பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.