மக்களவை தேர்தலில் நெருங்கி வரும் நிலையில் பாஜக வின் உள்ளூர் தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் கோர்தா நகரில் பாஜக வேட்பாளர் வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த பாஜக உள்ளூர் தலைவர் மங்குலி ஜனாவை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மேலும் பாஜக சார்பில் பந்திற்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், “எங்கள் கட்சி தலைவர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கொலைக்கு ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தளம்தான் காரணம். மக்கள் அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள்,” எனக் கூறியுள்ளார்.