மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முதல் நாளே முடங்கியது. மணிப்பூர் பிரச்சனையில் நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகளுக்கு பாஜக கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “மே முதல் வாரத்தில் நடந்த இந்த சம்பவம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது. இந்த மர்ம தொடர்பாக என மனதில் பல கேள்விகள் இருக்கின்றனர். மணிப்பூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதனால் நாங்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தை விவாதிக்கத் தயாராக இருக்கிறோம் என்று மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்தபோதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கான விதிகளுக்கு விவாதம் செய்கின்றனர் அப்படி என்றால் இந்த சம்பவம் முக்கியமில்லை, விதிகள் தான் முக்கியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.