இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 24 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கார்கில் போர் வெற்றி தினக் கொண்டாட்டம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. லடாக்கில் உள்ள போர் நினைவுச் சின்னம் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில் லடாக்கில் உள்ள போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்திற்கு நேரில் சென்று மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “கார்கில் போர் இந்தியா மீது திணிக்கப்பட்டது. அப்போது, பாகிஸ்தானுடனான பிரச்சனைகளைத் தீர்க்க இந்தியா முயன்றது. ஆனால் பாகிஸ்தானோ முதுகில் குத்திவிட்டது. அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த இந்த கார்கில் போர் 1999 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி முடிவடைந்தது. அதன் பின்னர், கார்கில் போரில் நாம் வெற்றி பெற்ற நிலையில் நமது ராணுவம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிச் செல்லவில்லை. இந்தியா அமைதியை விரும்புவதால் தான் கார்கில் யுத்தத்தில் வென்ற போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நமது ராணுவம் தாண்டிச் செல்லவில்லை. இந்திய நலன்களுக்கு ஊறுவிளைவிக்கப்பட்டால் எந்த நிலையிலும் நமது ராணுவப் படைகள் பின்வாங்காது என்று கார்கில் போரின் மூலம் பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் உணர்த்தி விட்டோம்.
நாட்டின் கண்ணியத்தைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம். அதற்காக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அந்த எல்லையைக் கடந்து சென்று தாக்குதல் நடத்துவோம். இந்தியாவுக்கு எதிரான போர் சூழல் ஏற்படும் போதெல்லாம் நமது ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் எப்போதுமே உறுதுணையாக ஆதரவு அளித்து வந்துள்ளனர். ஆனால், அது மறைமுகமான ஒத்துழைப்பாகவே இருந்திருக்கிறது. இனி அந்த நிலை மாற வேண்டும். எதிர்காலத்தில், போர் உருவானால் பாதுகாப்புப் படையினருக்கு நேரடியாக உதவுவதற்கு போர்க்களத்தில் இறங்க நாட்டு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் பலர் புதிதாய் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால், அவர்கள் திருமணத்தைப் பற்றியோ, குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமாக இருப்பதை எண்ணியோ கவலைப்படாமல் போர்க்களத்தில் துணிந்து போராடினார்கள். அவர்கள் தங்கள் உயிரைப் பற்றிக்கூடச் சிந்திக்கவில்லை. நாட்டுக்காக தங்களின் உயிரைத் தியாகம் செய்த நமது படை வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் தியாகம் வீண் போகவில்லை. அவர்களின் பங்களிப்பு பல தலைமுறைகளுக்கு உத்வேகமாக இருக்கும்” என்று கூறினார்.