உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (10/03/2022) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய கட்சிகளை வீழ்த்திய ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. கட்சித் தொடங்கிய குறுகிய காலத்தில் டெல்லியைத் தொடர்ந்து, இரண்டாவது மாநிலமாக பஞ்சாப்பில் ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக் அறிவித்தது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். அதன்படி, ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளையும், காங்கிரஸ் 18 தொகுதிகளையும், அகாலிதளம் 3 தொகுதிகளையும், காங்கிரஸ் 2 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 1 தொகுதியும், சுயேச்சை 1 தொகுதியும் கைப்பற்றியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியமைக்க 59 தொகுதிகள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநில முதலமைச்சராக, நகைச்சுவை நடிகரான பகவந்த் மான் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.