பீகார் மாநிலத்தில் அவத்பூர் கிராமத்தில் வசித்துவரும் 63 வயதான பெண் தேவி. இவர் கடந்த 16ஆம் தேதி தங்கள் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஐந்து நிமிட இடைவெளியில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி செலுத்தப்பட்ட பள்ளியில், ஒரே அறையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசிக்காக வெளியே தனது பெயரை பதிவுசெய்த தேவி, முதலில் ஒரு வரிசையில் நின்று தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். அதன்பிறகு அங்கு ஐந்து நிமிடங்கள் காத்திருந்த அவர், அதன்பிறகு வேறொரு வரிசையில் நின்று இன்னொரு தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தெரியவந்ததும், அவரது குடும்பத்தினர் தடுப்பூசி முகாமிற்கு வந்து அங்கிருந்த இருந்த சுகாதாரப் பணியாளர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேவி ஏன் இரண்டு வரிசையிலும் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது தெரியாத நிலையில், அவரது உடல்நிலையை மருத்துவக் குழு ஒன்று கண்காணித்துவருகிறது. அவர் தற்போது நலமாக இருப்பதாக அந்தக் குழு கூறியுள்ளது. மேலும், அந்த முகாமில் பணியில் இருந்த 2 செவிலியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.