இந்தியப் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், வர்த்தகம் ஒரு மணிநேரம் வரை நிறுத்திவைக்கப்பட்டது.
கரோனா அச்சத்தால் உலகளாவிய பங்குச்சந்தைகள் பலவீனமான வர்த்தக சூழலை எதிர்கொண்டுள்ளன. இதன் விளைவாக இந்திய பங்கு சந்தையும் கடந்த ஒருவார காலமாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை இந்தியப் பங்குச்சந்தை தொடங்கியசிறிது நேரத்திலேயே, நிஃப்டி வரலாறு காணாத அளவு சரிவைச் சந்தித்தது. இதன் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 3,090 புள்ளிகள் (9.43%) குறைந்து 29,687 ஆகப் பதிவானது. அதேபோல நிஃப்டி 966 புள்ளிகள் (10.07%) சரிந்து 8,624 ஆகப் பதிவானது. உலக சுகாதார நிறுவனம் நேற்று கரோனா வைரசை ஒரு தொற்றுநோயாக அறிவித்த சூழலில் உலகளாவிய பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.
உலகம் முழுவதும் சுமார் 127 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள இந்த கரோனா வைரசால் சுமார் 4,630 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 126,136 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 73 ஆக உயர்ந்துள்ளது. இதில் கர்நாடகாவின் கல்புர்கி பகுதியில் முதியவர் ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.