பா.ஜ.க.வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் இன்று (02/07/2022) தொடங்குகிறது. ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 19 மாநில முதலமைச்சர்கள், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டத்தையொட்டி, ஹைதராபாத் முழுவதும் பா.ஜ.க.வின் கொடிகள் மற்றும் பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. மத்திய அரசின் சாதனைகளைப் பறைசாற்றும் வகையில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் மற்றும் தேசிய நிர்வாகிகள் கூடி ஆலோசிக்கின்றன.
நாளைய தினம் மாநாட்டு மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்துவதே இரண்டு நாள் தேசிய செயற்குழுவின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஹைதராபாத்துக்கு இன்று (02/07/2022) வரும் பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், மீண்டும் புறக்கணிக்கிறார். ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வரும் பிரதமரை மாநில அமைச்சர்களின் ஒருவர் மட்டுமே வரவேற்க உள்ளதாக தகவல் கூறுகின்றன. கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாகப் பிரதமர் நரேந்திர மோடியை, தெலங்கானா முதலமைச்சர் புறக்கணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு முன் வருகை தரும் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் வரவேற்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.