குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. விஜய் ரூபானி முதல்வராக இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று (11.09.2021) விஜய் ரூபானி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ளும் விதமாக விஜய் ரூபானியை முதல்வர் பதவியிலிருந்து பாஜக நீக்கியதாக தகவல் வெளியானது.
விஜய் ரூபானி தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில், குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து இன்று அவர் குஜராத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மத்தியப் பிரதேசம், கோவா, ஹரியானா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, பூபேந்திர படேலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "குஜராத் முதல்வராக பதவியேற்ற பூபேந்திர பாய் அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும். பாஜக அமைப்பிலும் சரி, குடிமை நிர்வாகத்திலும் சரி, சமுதாய சேவையிலும் சரி அவரது முன்மாதிரியான பணியைப் பார்த்திருக்கிறேன். அவர் நிச்சயமாக குஜராத்தின் வளர்ச்சிப் பாதையை வளப்படுத்துவார்" என கூறியுள்ளார்.