தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான பல்வேறு துறைகள் சார்ந்த உறவை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் காசி சங்கமம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான அறிமுக விழா சென்னை ஐ.ஐ.டி.யில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்,.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.
“மக்களை விரக்தி அடையச் செய்வதே அவர்களின் நோக்கம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி
அப்போது பேசிய அவர், “காசி முதல் ராமேஸ்வரம் வரை ஏராளமான சத்திரங்கள் கட்டப்பட்டு அதை பல்வேறு பக்தர்களும் பொதுமக்களும் பயன்படுத்தியுள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட உறவுதான் காசி, ராமேஸ்வரம் மற்றும் காஞ்சிபுரம் இடையிலான உறவு. சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியத்திலும் கூட காசி, ராமேஸ்வரம் மற்றும் மதுரைக்கு இடையேயான தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாற்றை மீண்டும் அறிமுகப்படுத்தப் பிரதமர் மோடி எடுத்த தைரியமான முடிவுதான் இது. இதில் எந்த விதமான அரசியலும் கிடையாது.
மேற்கத்தியக் கலாச்சாரத்தைக் கேள்வி கேட்காமல் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அங்கெல்லாம் ஒரு நாடு என்பது மன்னர்களால் கட்டமைக்கப்பட்டது. அது ஐரோப்பியக் கலாச்சாரம். அங்கு மன்னருக்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கும். ஆனால், பாரதம் என்பது மன்னர்களால், பேரரசுகளால் உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக அது ரிஷிகளாலும் சனாதன தர்மத்தாலும் கட்டமைக்கப்பட்டது” எனக் கூறினார்.
இவ்விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.