புதுச்சேரியில் நேற்று முன்தினம் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அலுவலக அறைகளுக்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் நீதிபதிகள் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நீதித் துறையினர் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என பேசி இருந்தார்.
இது குறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "புதுச்சேரி மாநில நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறைகள் கட்ட சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அடிக்கல் நாட்டிய விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சரும் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. மாநில அந்தஸ்து பெறுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறியது புரியாத புதிராக உள்ளது. நீதிபதிகளிடம் இந்த கோரிக்கை வைத்திருக்க கூடாது. யாரிடம் என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என தெரியாமல் முதலமைச்சர் தள்ளாடுகிறார்.
மாநில அந்தஸ்து கோரி மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைக்கிறார். ஆனால் அதன் பின் பா.ஜ.க தலைவர் சாமிநாதன் மாநில அந்தஸ்து தேவையில்லை என கூறுகிறார். மாநில அந்தஸ்து கிடைக்கிறதோ இல்லையோ தனது நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதில் முதலமைச்சர் ரங்கசாமி குறியாக உள்ளார். மாநில அந்தஸ்து தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரை சந்தித்தாரா?, புதுச்சேரி மக்களை என்.ஆர்.காங்கிரஸ் அரசும், பா.ஜ.கவும் ஏமாற்றுகின்றன. உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் முறை கூடாது என சட்டத்துறை அமைச்சர் கிரண் பொய்யான தகவலை கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அதைப்பற்றி வெளியில் பேச கூடாது. ஆனால் மத்திய அரசு மத்திய அமைச்சர்கள் மூலம் பேசி வருவதை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்" என்றும் கூறினார்.