உத்தரப்பிரதேச மாநிலத்தின் தேடப்படும் குற்றவாளியான விகாஸ் தூபேவை மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரின் பிரபல மஹாகாலபைரவர் கோயில் அருகே வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், கொலை, கொள்ளை என 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த விகாஸ் தூபே என்ற ரவுடியைக் கடந்த வாரம் போலீஸார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு போலீஸார் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விகாஸ் தூபேவைப் பிடிக்க 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டதோடு, அவரைப் பற்றிய தகவல் கொடுப்போருக்குச் சன்மானமும் அறிவிக்கப்பட்டது. மேலும், விகாஸ் தூபேவுடன் தொடர்பில் இருந்த நான்கு கூட்டாளிகளும் போலீஸாரால் அடுத்தடுத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் டெல்லி அருகே ஹரியானாவில் உள்ள விடுதி ஒன்றில் விகாஸ் தூபே தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அங்கு போலீஸார் வருவதற்குள் அங்கிருந்து விகாஸ் தப்பி விட்டார்.
இந்தச் சூழலில், மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைன் நகர் வந்திருந்த விகாஸ், அங்குள்ள மஹாகாலபைரவன் கோயிலில் பூஜை செய்ய சென்றுள்ளார். அப்போது கோயிலின் வெளியில் பூஜை பொருட்கள் வாங்கியவரை கடைக்காரர் அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் கோயிலின் காவலர்களுக்கும், உஜ்ஜைன் போலீஸுக்கும் தெரிவித்து எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கோயிலின் உள்ளே நுழைய முயன்ற விகாஸை அதன் காவலர்கள் மறித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்களிடம் போலி அடையாள அட்டையைக் காண்பித்து விகாஸ் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், சற்றே சுதாரித்த அங்கிருந்த போலீஸார், விகாஸை சுற்றி வளைத்தனர். உஜ்ஜைன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் விகாஸ் துபேவை ‘டிரான்ஸிட் ரிமாண்ட்’ செய்து உத்தரப்பிரதேசம் கொண்டு வர கான்பூர் போலீஸ் மத்தியப்பிரதேசம் விரைந்துள்ளனர்.