மும்பையில் மதுபான விடுதி ஒன்றின் பாதாள அறையில் பார் டான்ஸர்கள் 17 பேர் மீட்கப்பட்டது, தற்போது அதிரவைக்கும் தகவலாக இருக்கிறது. பெண்களை வைத்து ஆட்டம் நடத்தும் மதுபான விடுதிகளுக்கு (Dance Bars) 2005இல் மஹாராஷ்ட்ராவில் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், ஆட்டங்களைப் பார்த்துப் பழகிவிட்ட வாடிக்கையாளர்களுக்காகவும், பணம் குவிக்கும் தொழில் என்பதாலும், தொடர்ந்து நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து டான்ஸ் பார்கள் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
டான்ஸ் பார்களை நடத்துபவர்கள், கட்டுப்பாடுகளை மீறுவதெல்லாம் வாடிக்கையானதுதான். அந்தேரியில் இயங்கும் ஒரு டான்ஸ் பாரில், பெண்களின் ஆபாச நடனம் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடந்துவருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், சமூக குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர், கடந்த 11ஆம் தேதி அங்கு சோதனை நடத்தினர். அவர்களின் கண்ணுக்கு, அந்தப் பாரில் நடன பெண்கள் யாரும் தென்படவில்லை. விசாரணைக்கு ஆளான டான்ஸ் பார் ஊழியர்களோ, பெண்களின் ஆட்டம் இங்கு நடப்பதில்லை என்று அழுத்தமாகச் சொல்லிவிட, காவல்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று.
12ஆம் தேதி அதிகாலை, சமூக குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் அங்கு சென்று மீண்டும் சோதனை நடத்தியபோது, முகம் பார்க்கும் பெரிய கண்ணாடி ஒன்று உறுத்தலாகத் தெரிய, அதை உடைத்தனர். அந்தக் கண்ணாடிக்குப் பின்புறம் கதவு ஒன்று இருக்க, அது திறக்கப்பட்டது. அங்கே குறுகலான பாதாள அறைக்குள், அரைகுறை ஆடைகளுடன் பார் டான்ஸர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு மீட்கப்பட்டனர்.
போலீஸ் ரெய்டில் டான்ஸர்கள் சிக்காமல் இருப்பதற்காகவே அப்படி ஒரு ரகசிய அறையை அமைத்து, அந்த அறையில் குடிநீர், குளிர்பானம், உணவு வகைகள் என சகல வசதிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர். வழக்குப் பதிவாகி டான்ஸ் பார் மேனேஜர், கேஷியர் மற்றும் மூன்று ஊழியர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அந்த டான்ஸ் பாருக்கு சீல் வைக்கப்பட்டது.
‘என்னடா பொல்லாத வாழ்க்கை!’ என விரக்தியுடன் வாழ்ந்துவரும் பார் டான்ஸர்களின் ரகசிய நடவடிக்கைகளும், அவர்களை வைத்து தொழில் என்ற பெயரில் டான்ஸ் பார்களை நடத்துபவர்கள் கண்ணாமூச்சி காட்டுவதும், காவல்துறையின் சோதனை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.