இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும்.மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும், எதிர்க்கட்சியினர் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கார்கில் வெற்றி தினம் நேற்று நாட்டின் பல பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்,லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியவுடன் காலையில் கார்கில் போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மெளன அஞ்சலி செலுத்திய பிறகு, நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
உடனடியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கையில் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டதால் சபை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பகல் 12 மணிக்கு சபை கூடிய போது மத்திய அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு 6 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியபோது வன பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை கூடியவுடன், ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் போட்டிப் போட்டுக் கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு பேசிய காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, “கடந்த செவ்வாய்க்கிழமை ( ஜூலை 25) அன்று நான் பேசிய போது எனது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு கட்சியின் மாநிலங்களவையின் மூத்த உறுப்பினருமான நான் உரையாற்றும் போது மைக் அணைக்கப்பட்டிருப்பது என்பது எனது சுயமரியாதையை அவமானப்படுத்தும் செயல். அதுமட்டுமல்லாமல், இது எனக்கு ஏற்பட்ட உரிமை மீறல். அரசின் உத்தரவின்பேரில் இந்த சபை நடத்தப்பட்டால், இது ஜனநாயகம் அல்ல” எனக் கடுமையாக விமர்சித்தார்.
திருச்சி சிவா உள்பட மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவாகப் பேசினார்கள். இதையடுத்து, மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மல்லிகார்ஜூன கார்கே பேசும் போது அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்படவில்லை என்று விளக்கம் கொடுத்தார். ஆனால்,அதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கிடையே, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுந்து, “அவையில் ஒரு உறுப்பினர் மற்ற உறுப்பினர்களை ஏமாற்றுப் பேர்வழி என்று கூறியிருக்கிறார். அதை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். மேலும், இதனைக் கடுமையாகக் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார். அதன் பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சபை கூடிய போது, மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டாவை ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய சபை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் அழைத்தார். அப்போது, மல்லிகார்ஜூன கார்கே குறுக்கிட்டு, “என் மைக் இணைப்பைத் துண்டிக்காதீர்கள். பிரதமர் கடந்த 5 நாட்களாகச் சபைக்கு வரவில்லை. அவர் ஏன் அறிக்கை அளிக்க மறுக்கிறார்?. எங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க மத்திய அரசு வாய்ப்பு அளிக்கவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்” என்று கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.