உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலமே மிதந்துவருகிறது. இதில் வெள்ளத்திலும், மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு, கட்டட இடிபாடு உள்ளிட்டவற்றிலும் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், மேலும் பலர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த மழை மற்றும் வெள்ளத்தால் சுற்றுலாப் பகுதியான நைனிடால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அது மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. நைனிடால் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை 27 ஆக உயரலாம் என தெரிவித்துள்ள நைனிடால் கூடுதல் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அசோக் ஜோஷி, "பல பகுதிகளில் மக்கள் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் மீட்பு குழுக்களை அனுப்பியுள்ளோம். ஆனால் வானிலை காரணமாக மீட்புப்பணிகள் கடினமாக உள்ளன" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். வெள்ளப்பெருக்கால் வீடுகளை இழந்தவர்களுக்குத் தலா 1.9 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று (20.10.2021) உத்தரகாண்ட் சென்று அங்குள்ள நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். மேலும் நாளை, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை அமித் ஷா வான்வழியாக பார்வையிட உள்ளார்.