எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலில், டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இதனால், ஆம் ஆத்மி அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இருக்காது. டெல்லியில் எந்தவித கூட்டணி அமைக்காமல் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது” என்று கூறினார். டெல்லியில் நேற்று முன் தினம் (30-11-24) தனது நடைப்பயணத்தின் போது திரவப் பொருள் வீசப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “நான் இந்த பிரச்சனையை எழுப்பிய பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. ஆனால், அதற்கு பதிலாக, எனது பாதயாத்திரையின் போது நான் தாக்கப்பட்டேன். திரவம் என் மீது வீசப்பட்டது. அது பாதிப்பில்லாதது, ஆனால் அது தீங்கு விளைவிக்கும்” என்று பேசினார்.