பொது இடங்களில் மக்களின் உடல் வெப்பத்தைக் கண்டறியும் ஸ்க்ரீனிங் சோதனைகளை மேற்கொள்ளச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய முறை ஒன்றைக் கண்டறிந்துள்ளார் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்த இளைஞர் ஒருவர்.
தெலுங்கானா மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சையிலிருந்த புன்னா ரெட்டி, பொது இடங்களில் ஸ்க்ரீனிங் செய்முறைகளை எளிதாக்குவதற்கும், நேர விரயத்தைக் குறைப்பதற்கும் ஏற்றவாறு புதிய கருவி ஒன்றை வடிமைத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்தக் கருவியை மூலம், ஒரு வினாடியில் 30 பேரின் உடல் வெப்பநிலையைக் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை உள்ளவர்களை அல்லது முகமூடிகளை அணியாதவர்களைக் கண்டறியும் இந்தக் கருவியின் சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து, இந்த அமைப்பு செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத் ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய புன்னா ரெட்டி, "நான் எனது தொழில்முறை பயணமாக இந்தியா வந்தபோது, எனக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு நான் ஒரு மருத்துவமனையில் 17 நாட்கள் சிகிச்சையிலிருந்தேன். அப்போதுதான் ஒரு நொடியில் 30 பேரை ஸ்கேன் செய்யக்கூடிய இந்தப் புதிய முறையை நாங்கள் செயல்படுத்தி வெற்றிகண்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய முயற்சி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தென் மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் ராகேஷ், "தெர்மோமீட்டர்களின் உதவியுடன் பயணிகளைத் திரையிடுவதற்கு நிறைய நேரம் தேவைப்படும். ஆனால், இந்த முறை அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் குறைந்த நேரத்தில் கையாள உதவும். இந்தப் புதிய முறையை அடுத்தடுத்து பல முக்கிய இடங்களில் அறிமுகப்படுத்துவதுகுறித்து பரிசீலித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.