![indian army](http://image.nakkheeran.in/cdn/farfuture/EHYA43usdsvWkoYijq1VMLnDrF6XQ45OtI0BUpvuu8A/1633945667/sites/default/files/inline-images/dwfwq3f.jpg)
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு இராணுவ அதிகாரி, நான்கு இராணுவ வீரர்கள் என ஐந்து பேர் வீர மரணமடைந்துள்ளனர். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்து உளவுத்துறையின் தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அவர்களைத் தேடிச் சென்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு தீவிரவாதிகளைப் பாதுகாப்பு படையினர் தேடிச் செல்லும்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இந்தச் சண்டையிலேயே இராணுவ அதிகாரி உட்பட ஐவர் வீர மரணமடைந்துள்ளனர்.
மேலும், சூரன்கோட் பகுதியில் நான்கு முதல் ஐந்து தீவிரவாதிகளோடு துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீவிரவாதிகள் சில நாட்களுக்கு முன்னர் நாட்டிற்குள் வந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இதனிடையே பயங்கரவாதிகளுடனான என்கவுண்டர் நடந்துவருவதாகவும், மேலும் விவரங்களுக்காக காத்திருப்பதாகவும் பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.