
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை டெல்லியில் பரப்பும் விதமாக தமிழ் அகாடெமி ஒன்றை உருவாகியுள்ளது டெல்லி அரசு.
இந்தியத் தலைநகரான டெல்லியில் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக டெல்லியில் தங்கியிருக்கும் இம்மக்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் கணிசமான அளவு வசிக்கின்றனர். இந்நிலையில், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை டெல்லியில் பரப்பும் விதமாக தமிழ் அகாடெமி ஒன்றை உருவாகியுள்ளது டெல்லி அரசு.
இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டெல்லியில் தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பரப்பும் வகையில் முதல்வர் கெஜ்ரிவாலின் உத்தரவுபடி, தமிழ் அகாடெமி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகாடெமியின் தலைவராக டெல்லி தமிழ்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அகாடெமிக்கான தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஏற்படுத்தப்படும்.
தேசத்தின் அனைத்து மாநில மக்களும் டெல்லியில் பணிபுரிந்து வருவதால், கலாச்சாரச் செரிவு மிக்க நகராக டெல்லி திகழ்கிறது. பன்முகக் கலாச்சாரம்தான் டெல்லியைச் சிறப்பாக வைத்திருக்கிறது. தமிழகத்திலிருந்து ஏராளமான மக்கள் டெல்லியில் பணியாற்றி வருகிறார்கள். அரசு சார்பில் தமிழக மக்களுக்காக ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ் மக்களின் கலாச்சாரம், மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் தமிழ் அகாடெமி அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.