
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று (29.03.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ‘வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் விதிகளுக்கான இயக்க நடைமுறை’ கையேட்டினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “நாம் இன்று மதிப்போடும், சுயமரியாதையோடும், உரிமைகளோடும் இருக்கிறோம் என்றால், அதற்கு தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் தான் காரணம். அவர்களது பிறந்தநாளை முறையே சமூகநீதி நாளாகவும், சமத்துவ நாளாகவும் நாம் கொண்டாடி வருகிறோம்.
வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்திட, ஜனவரி 24 முதல் 30 வரை மனித நேய வார விழா கொண்டாடப்படுகிறது. சமத்துவத்தை நிலைநாட்டும் விதமாக ஜனவரி 26, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 மற்றும் வேறு முக்கிய உள்ளூர் விடுமுறை நாட்களிலும் சமபந்தி விருந்து. ‘சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த 40 லட்சம் ரூபாய் செலவில் 983 நபர்களுக்கு பயிற்சி. சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையைக் கடைபிடிக்கும் கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில், 10 கிராமங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் ரூபாய் வீதம் கடந்த நான்கு ஆண்டுகளில், 259 கிராமங்களுக்கு 25 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதிலும், இந்த 4 ஆண்டுகளில், சமூகநீதி மற்றும் சமத்துவ சிந்தனைகள் குறித்து 6 ஆயிரத்து 977 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். இதில், கடந்தாண்டு மட்டும் 3 ஆயிரத்து 794 விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் திறனை மேம்படுத்தவும், பல்வேறு வகையான சமூக விலக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பயிற்சிகளை வழங்கவும் மற்றும் தரவுகள் சேகரிக்கவும், 1 கோடியே 59 லட்சம் ரூபாய் அரசு மானியத்துடன், சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான மையம் ஒன்று சென்னை சமூகப் பணி கல்லூரியில் நிறுவப்பட்டு, அந்த மையம், விளிம்பில் உள்ள பழங்குடியினர் மக்களை பற்றிய ஆய்வுகள், ஆவணப்படங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மற்றும் செயல்களை செய்து வருகிறது.
அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஆண்டை விட இந்தாண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 விழுக்காடு குறைந்துள்ளது. வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 2021இல் 445லிருந்து 2024இல் 368 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது 19 விழுக்காடு குறைவாகும். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கோவி. செழியன், சி.வி. கணேசன், மா. மதிவேந்தன், என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், ஜி. செல்வம், தொல். திருமாவளவன், ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், எனப் பலரும் கலந்து கொண்டனர்.