அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது இரண்டு நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று மும்பையில் நடந்த கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 65 தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பாட்னா கூட்டத்தில் 19 கட்சிகளுடன் முதல் கூட்டத்தை நடத்தினோம். அந்த கூட்டத்தில் ஒற்றுமையாக இருந்து பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடத்தினோம். அந்தக் கூட்டத்தில் இந்த கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை சூட்டி பணியை தொடங்கினோம். மூன்றாவதாக மும்பையில் 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து வலிமையான கூட்டணியாக நிரூபித்து காட்டியுள்ளோம்.
பாஜக அரசு எப்படி சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். அதிலும் குறிப்பாக பிரதமர் மோடியால் தமது அரசின் சாதனைகளைப் பற்றி பேச முடியவில்லை. பாஜக அரசின் சாதனைகளாக எடுத்துக்கூற பிரதமர் மோடிக்கு எதுவுமில்லை. இந்தியா கூட்டணி பற்றி அடிக்கடி பேசி கொண்டிருக்கிறார். பாஜக அரசை எதிர்த்து நடைபெறும் போரில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்.
இந்தியா கூட்டணியின் சிறந்த விளம்பரதாரராக பிரதமர் மோடி செயல்படுகிறார். இந்தியா கூட்டணி பற்றி பிரதமர் மோடி அடிக்கடி பேசி வருவதால் இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் பிரபலமாகி வருகிறது. பாஜக ஆட்சியை அகற்றுவதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது. மோடி தலைமையிலான ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதை சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து சி.ஏ.ஜி. அம்பலப்படுத்தியும் இது குறித்து மோடி வாய் திறக்கவில்லை. அரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்துகிறது. மோடி ஆட்சியில் தேர்தல் ஆணையத்திற்கே சுதந்திரம் இல்லை. அதே போன்று மோடியின் ஆட்சியில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் மதிப்பு இல்லை” என தெரிவித்தார்.