ஆந்திரா மாநிலம் அதிவிக்கொத்துரு கிராமத்தில் வயதான முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும், அந்தப் பகுதியில் காவல்துறை துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் ஸ்ரீஷா, முதியவர் உடல் கிடந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அப்போது அந்த முதியவர், அந்தப் பகுதியில் பிச்சை எடுத்து வந்தவர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து முதியவர் உடலை அங்கிருந்து எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்ய எண்ணினார். ஆனால் முதியவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் யாரும் அருகில் வர தயாராக இல்லை. இதனையடுத்து ஸ்ரீஷாவே முதியவரின் உடலை, சுமார் 1 கிலோமீட்டருக்கு மேல் சுமந்து சென்று, ஆதரவற்றவர்களுக்கு இறுதி சடங்கு செய்யும் அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார்.
ஸ்ரீஷாவின் இந்தச் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருவதோடு, அவர் முதியவரின் உடலைத் தூக்கி செல்லும் புகைப்படமும் வைரலாகி வருகிறது. மேலும் துணை ஆய்வாளர் ஸ்ரீஷாவின் இந்த செயலுக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.