பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகமுறை தோல்வியடைந்துள்ளதோ என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று டெல்லியில் பேசிய அமித்ஷா, "முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, தினந்தோறும் செய்தித் தாள்களில் ஊழல் குறித்த செய்திகள் தான் இடம்பெற்றன. இந்திய எல்லைகள் பாதுகாப்பில்லாமல் இருந்தன. பெண்கள் பாதுகாப்பில்லா உணர்வுடன் இருந்தனர். ஒவ்வொரு நாளும் மக்கள் சாலைகளில் போராட்டம் நடத்தினர். மேலும் இதனை ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் எந்தஒரு முக்கியமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி, பண மதிப்பு நீக்கம், துல்லியத் தாக்குதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள ஜனநாயக முறைகளை ஆய்வு செய்து பல கட்சி ஜனநாயக முறையை கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கியது. ஆனால் இந்திரைய நிலையில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகமுறை தோல்வியடைந்துள்ளதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்கள் அவநம்பிக்கையடைந்தால், நம்முடைய இலக்கை எப்படி எட்ட முடியும்?" என கூறினார்.
இந்திய அரசியலமைப்பின் முக்கிய சாராம்சமான பல கட்சி ஆட்சிமுறையை குறைகூறும் விதமான அவரது பேச்சை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் ஒற்றையாட்சி ஆட்சி முறை கொண்டுவரும் திட்டம் ஏதேனும் மத்திய அரசிடம் உள்ளதா எனவும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுந்து வருகிறது.