தெலுங்கானாவில் பாஜக ஆட்சியமைத்தவுடன் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் இதுவரை சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அவர்களை 10 சதவீத இடஒதுக்கீட்டு பிரிவுக்கு மாற்றியது. அதாவது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக அவர்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு (இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது. மேலும் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு இனி ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கும் கூடுதலாக தலா 2 சதவீதம் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் பசவராஜ் பொம்மை அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தெலுங்கானவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. காரின் கைப்பிடி மஹ்லிஸ் ஒவைசியிடன் இருக்கும்போது அது எப்படி சரியான திசையை நோக்கி செல்லும். சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. சந்திரசேகர் ராவ் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளார். 2024 தேர்தலிலும் அந்த இடத்தை மோடியே வைத்து இருப்பார்.
முதலில் அவர் இந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் தன்னுடைய இருக்கையில் தக்க வைப்பதில் கவனம் செலுத்தட்டும். ஒருபோதும் பிரதமர் மோடியை தெலுங்கான மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. மத்திய அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களை சென்றடையாமல் சந்திரசேகர ராவின் அரசு தடுத்து வருகிறது. ஆனால் கண்டிப்பாக பாஜக தெலுங்கானாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். அப்படி பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களின் வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து அதனை இதர பிற்படுத்தப்பட்டோர், மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என்றார்.