தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், சிரோஞ்ஜ் தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் தங்களது மகன்களை முதலமைச்சராக்க திட்டமிட்டு வருகின்றனர். அதே போல், சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க நினைத்து வருகிறார். மத்திய பிரதேச வாக்காளர்களுக்கு இந்த ஆண்டு மூன்று முறை தீபாவளி கொண்டாடும் வாய்ப்பு கிட்டியுள்ளது. கடந்த 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டீர்கள். இரண்டாவது தீபாவளி மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் நாளான டிசம்பர் 3 ஆம் தேதி பா.ஜ.க வெற்றி பெற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவீர்கள்.
மூன்றாவது தீபாவளி, அயோத்தி ராமர் தனது ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நாளான ஜனவரி 22ஆம் தேதி ஆகும். எனவே, இம்முறை 3 தீபாவளி காத்திருக்கிறது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்தால் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு மத்திய பிரதேச மாநில மக்கள் இலவச தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.