பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஈரோடு வருவதாக அக்கட்சியின் தமிழக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இன்று காலை தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தமிழகத்தில் பாஜக குறிப்பிட்ட தொகுதிகளை தங்கள் வசமாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்தியிலும் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கடந்த ஒரு மாத காலத்தில் மதுரைக்கும் திருப்பூருக்கும் வந்து சென்றுள்ளார். மேலும் வரும் 1ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளார். இந்நிலையில், அமித் ஷாவின் இந்த வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என வானதி சீனிவாசன் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு வந்தடைந்த அமித் ஷா பாஜக நெசவாளர்கள் அணி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, 'தமிழ்நாட்டில் உள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணி இந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை. அது ஊழலுக்கான கூட்டணி. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பின்தங்கிய ஜவுளித்துறையை பாஜக அரசுதான் தற்போது மேம்படுத்தி வருகிறது. எனவே மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைக்க நாம் உறுதி ஏற்கவேண்டும்' என கூறியுள்ளார்.