கரோனா தொற்று காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற கருத்து புதுச்சேரியில் பரவி வருகிறது. இதையடுத்து புதுச்சேரி மட்டுமில்லாது தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று, திரும்பி வருகின்றனர். மேலும் பலர் செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ஜிப்மரில் அவசர, அவசியமான சிகிச்சைகள் மறுக்கப்படாது என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
நேற்று சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி லாஸ்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், “ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருப்பதாக அறிந்து அதிகாரிகளுடன் பேசினேன். 60 சதவீதத்துக்கும் மேலாக மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதனால் சாதாரண அறிகுறிகளோடு வரும் நோயாளிகளை அனுமதிக்கவில்லை என்று மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். எத்தகைய சூழ்நிலையிலும் நோயாளிகள் பாதிப்படையாத வகையில் மருத்துவ சேவை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர்கள் உறுதி அளித்துள்ளனர். எனவே அவசர சிகிச்சையும், அவசியமான சிகிச்சையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மருத்துவமனைகளில் மறுக்கப்படாது” என்றார்.
இதனிடையே ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், ‘புதுச்சேரியில் தினசரி சுமார் 2500 பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜிப்மர் வெளிப்புற சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. ஜிப்மரின் முன்கள பணியாளர்களும் கரோனாவால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த சூழ்நிலையில் அனைத்து துறைகளின் குறிப்பிட்ட முன் களப்பணியாளர்கள் அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவால் பாதிப்படைந்த மருத்துவர்கள் கூட வீட்டில் இருந்தபடியே தொலைபேசி மூலம் மருத்துவ சேவை செய்து வருகின்றனர். ஜிப்மரில் நோயாளிகளுக்கு தனிப் பிரிவில் ஆக்சிஜன் மற்றும் செயற்கை சுவாச கருவிகள் உடன் கூடிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிப்மரில் சாமானிய மக்களின் நலன் கருதி வெளிப்புற சிகிச்சை சேவை தொடர வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் அறிவுறுத்தல்களை ஜிப்மர் அறிந்துள்ளது. வெளிப்புற சிகிச்சைகளை நிறுத்தி விட்டதாக சமூக ஊடங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை.
அனைத்து வெளிப்புற சேவைகளும் தொடர்ந்து செயல்படுகின்றன. இம்மருத்துவமனையில் வழக்கமாக 10,000 புதிய நோயாளிகள் தினமும் பதிவு செய்யப்படுவதால் மத்திய அரசின் தனிமனித இடைவெளி, கரோனா விதிமுறைகள் அமல்படுத்த இயலவில்லை. மேலும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தவுடன் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்படும் என்று உறுதி அளிக்கப்படுகிறது. தீவிர மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை தொடர்பான பிரச்சினைகள் உடையவர்களும் மட்டும் ஜிப்மர் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.