
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க வழிவகை செய்யும் தேர்தல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.
அதன் தொடர்ச்சியாக, இன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று காலை தேர்தல் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சித்த போது எதிர்க்கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதியம் அவை கூடியபோது தேர்தல் சட்டத் திருத்த மசோதா, தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி அமி யாக்னிக், "இது இந்திய அரசியலமைப்பு வழங்கிய தனியுரிமையை மீறுவதாகும். இது பல வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும்" என்றார். சமாஜ்வாடி ஏம். பி ராம் கோபால் யாதவ், "ஆதார் இல்லாத ஏழைகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். நான் இந்த மசோதாவை எதிர்க்கிறேன். 12 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு இந்த மசோதாவை நிறைவேற்றுகிறது" என விமர்சித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவதாசன் பேசுகையில், "ஜனநாயகத்தின் உரிமையைப் பாதுகாக்க, அனைவருக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட 12 உறுப்பினர்களை அழையுங்கள்" என்றார். இதற்கிடையே அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்தன.
இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சபாநாயகரின் இருக்கை அருகே வந்து, மசோதாவை நாடாளுமன்ற தேர்வு குழுவிற்கு அனுப்பத் தீர்மானம் கொண்டுவந்தனர். ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது. தொடர்ந்து மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சில திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதனைத்தொடர்ந்து தேர்தல் திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.