கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபரில் உயிரிழந்தார். நடிகர் என்பதைத் தாண்டி சமூக சேவையால் புகழ் பெற்றவர் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமாருக்கு கன்னட அரசின் மிக உயரிய விருதான ‘கர்நாடக ரத்னா’ விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடந்தது. புனித் ராஜ்குமாரின் மனைவியிடம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விருதினை வழங்கினார். இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர், “பெரிய நடிகர்கள் 70 ஆண்டுகள் கடினமாக உழைத்து புரிந்த சாதனையை நமது அப்பு 21 வருடங்களில் 35 படங்களில் நடித்து அனைவரின் மனதையும் வென்று அமரர் ஆகிவிட்டார். அவர் எப்போதும் நம்முடன் தான் இருப்பார். அவரது மனைவி அஸ்வினி இந்த துக்கத்தை எப்படி தாங்கிக் கொள்வார் என்பது தெரியவில்லை. கடவுள் அஸ்வினிக்கு துணை இருக்க வேண்டும்.
சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று நான் ராஜராஜேஸ்வரியையும், அல்லாவையும், ஏசுவையும் வேண்டிக்கொள்கிறேன். அப்பு கடவுளின் குழந்தை. அந்த குழந்தை நம்முடன் சில நாட்கள் தங்கி தன் திறமையை வெளிப்படுத்தி மீண்டும் கடவுளிடம் சென்று விட்டது. புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கிய கர்நாடக அரசிற்கு அனைத்து ரசிகர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.