நாட்டின் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை காரணமாக இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியில் மத்திய நிதியமைச்சகம் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, ஜிஎஸ்டி வரி குறைப்பு, புதியதாக ஆட்டோமொபைல் சார்ந்த தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்
இதில் குறிப்பாக நாடு முழுவதும் வங்கிகள் சார்பில் கடன் வழங்கும் முகாம்கள் 400 மாவட்டங்களில் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். பண்டிகை செலவுகள், வீடு வாங்குதல், வேளாண்மை, சிறு-குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கும், இந்த முகாம்கள் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று கூறினார். அதன்படி நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள், கார், இரு சக்கர வாகனங்கள் மற்றும் மற்ற பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக பொதுத்துறை வங்கிகள் சார்பில் கடன் வழங்கும் முகாம்கள் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் அக்டோபர் 9- ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒன்பது நாட்கள் நடந்த வங்கி கடன் வழங்கும் முகாமில் ரூபாய் 81,700 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். அதில் ரூபாய் 34,342 கோடி புதிய நபர்களுக்கு அளிக்கப்பட்ட கடன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.