உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்கி, மார்ச் ஏழாம் தேதிவரை ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்த அகிலேஷ் யாதவ், தற்போது தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
கடந்த முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன்மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத், இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதைத் தொடர்ந்து, அகிலேஷ் யாதவும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் அகிலேஷ் யாதவிடம் இதுதொடர்பாக கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், "நான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், ஆசம்கர் மக்களிடம் அனுமதி கேட்பேன். என்னை அவர்கள் அந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்துள்ளதால், அவர்களிடம் நான் அனுமதி பெற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ், ஆசம்கர் மக்களவை தொகுதியின் எம்.பியாக இருந்து வருகிறார் என்பதும், அவர் இதுவரை மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.