பெங்களுருவில் நடைபெற்றுவரும் ஏரோ இந்தியா கண்காட்சியின் ஓர் பகுதியாக ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டியில், நடிகர் அஜித்தின் 'தக்ஷா' குழு மூன்று பிரிவுகளில் பெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஏரோநாட்டிக்கல் பிரிவின் தக்ஷா குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித். அஜித்தின் வழிகாட்டுதலோடு அந்த அணி மாணவர்கள் உருவாக்கிய ட்ரோன் (ஆளில்லா விமானம்) ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியில் நடைபெற்ற 'மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச் - 2018' போட்டியில் கலந்துகொண்ட நீண்ட நேரம் வெற்றிகரமாகப் பறந்து சாதனை படைத்தது. நூலிழையில் முதல் இடத்தை தவறவிட்ட அந்த அணி இரண்டாம் இடம் பிடித்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ட்ரோன் ஒலிம்பிக் போட்டியில் மூன்று பிரிவுகளில் தக்ஷா அணி வெற்றி பெற்றுள்ளது. ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதிக் 4 கிலோவுக்கும் அதிகமான கண்காணிப்பு விமானப் பிரிவில் தக்ஷா அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து, ரூ.1.5 லட்சம் பரிசுத் தொகையையும், 4 முதல் 20 கிலோவுக்கு இடையிலான கண்காணிப்பு விமானப் பிரிவில் முதலிடத்தை பிடித்து 3 லட்ச ரூபாயையும், பறக்கும் தொழில்நுட்ப சவால் பிரிவில், இரண்டாம் இடத்தையும் பெற்று ரூ.3 லட்சம் ரூபாயையும் பரிசாக பெற்றது.
இதில் கலந்து கொண்ட எந்த அணியும் 3 பிரிவுகளில் பரிசு வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் அணியின் இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.