மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியான நிலையில் இன்று (நவம்பர் 27) எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் திடீரென அஜித் பவார் ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றார் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ். இந்த சூழலில் இன்று மாலைக்குள் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று மாலை அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து தேவேந்திர பட்னாவிஸும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நேற்றிரவு 10 மணிக்கு, ஆளுநரைச் சந்தித்த சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதன்படி மும்பை சிவாஜி பூங்காவில் நாளை மாலை உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்கிறார். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அஜித் பவாருக்கு அக்கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், "நான் என்.சி.பியுடன் இருந்தேன், நான் என்சிபியுடன் தான் இருக்கிறேன் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். அவர்கள் என்னை கட்சியை விட்டு நீக்கினார்களா? அதுபோன்ற எதாவது ஒரு செய்தியை நீங்கள் எங்காவது கேட்டீர்களா அல்லது படித்தீர்களா? நான் இன்னும் என்.சி.பி உடன் தான் இருக்கிறேன்" என தெரிவித்தார்.