புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும் தற்போது அதிகரித்து வருகின்றது. கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் குடும்ப அட்டை ஒன்றிற்கு 5000 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை முதலமைச்சரின் நிவாரண நிதி மூலமாக வழங்காததால் முதல்வர் நாராயணசாமியை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் சட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன் எம்.எல்.ஏ, "புதுச்சேரியில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நோயின் அறிகுறி இல்லாமலேயே பரவி வருவதால் தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை சுகாதாரத்துறை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாக நிலை குலைந்து போய் உள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் எந்த ஒரு நிதியுதவியும் வழங்கப்படவில்லை. அதேபோல் கரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு நிதியோ அல்லது அன்றாட உணவிற்கான ஏற்பாடுகளையோ செய்யவில்லை.
கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டைச் சுற்றியுள்ள வீடுகளையும் கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டு வருவதினால் அந்த இடத்தில் உள்ள குடும்பத்தினருக்கும் அரசு எந்த ஒரு நிதியுதவியோ அல்லது உணவுப் பொருட்களோ வழங்கவேண்டும், அதுவும் வழங்கவில்லை. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இதுபோன்று கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட ரூ.500 மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் ஒரு முறை மட்டும் வழங்கி உதவி செய்தது. தற்போது மூன்று மாதங்களாக மாநிலம் முழுவதும் எந்த உதவியும் அரசு செய்யவில்லை.
அவர்களது வாழ்க்கையே சிறைப்பிடிக்கப்பட்ட வாழ்க்கையைப் போன்று உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை தகரம் கொண்டு அடைப்பது மட்டுமே அரசின் செயலாக உள்ளது. அதன்பிறகு என்ன ஆனார்கள் என்று எந்த ஒரு அதிகாரியும் திரும்பி கூட பார்ப்பதில்லை. அதனால் கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் வசிக்கும் மக்கள் செய்வதறியாமல் பாலைவனத்தில் தண்ணிருக்கு ஏங்குவது போல் உள்ளனர். இது போன்ற ஒரு மிக, மிக முக்கியமான காலகட்டத்தில் அரசும், ஆளுநர் அலுவலகமும் இன்னமும் தங்களது வெறுப்பு உணர்ச்சிகளைதான் தினந்தோறும் வெளிக்காட்டிக் கொண்டு வருகிறார்கள்.
அரசு இந்த பிரச்சனையில் மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யாமல் ஒரு பார்வையாளராக மட்டுமே உள்ளது. இது என்ன நியாயம், இது மக்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வைத் தான் ஏற்படுத்தி வருகிறது. உடனடியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அந்த கட்டுப்பாட்டு மண்டல பகுதிக்குள் கொண்டுவரப்பட்டவர்களுக்கும், அன்றாட உணவுக்கு அரசு ஏதேனும் உதவிசெய்ய வேண்டும். ஆனால் அரசு செய்யவில்லை. தமிழகத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு 5,000 ரூபாய் தர வேண்டும் என வலியுறுத்துகின்றார்.
புதுச்சேரியில் தி.மு.க துணையோடு ஆட்சி நடத்தும் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் 3 லட்சம் குடும்பத்திற்கும் தலா 5,000 வழங்க அரசு ஏன் முன்வர கூடாது. அனைத்து குடும்பத்தினருக்கும் ஐந்தாயிரமும், கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உணவுப் பொருட்களும் போதிய மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்த உள்ளார்த்தமாக ஈடுபட்டு புதுச்சேரி மாநில மக்களை கரோனா பிடியிலிருந்து காப்பாற்றவும், அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளையும் செய்ய வேண்டும்" என்றார்.