புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்திட வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சாலையில் பாலை ஊற்றி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் அண்டை மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் பால் 42 ரூபாய்க்கு மேலாக வாங்கப்படுவதாகவும், உள்ளூர் பால் உற்பத்தியாளர்களிடம் வாங்கப்படும் பால் 32 ரூபாய்க்கு வாங்கப்படுவதாகவும், இதுகுறித்து முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினால் அவர் தட்டிக்கழிப்பதாகவும் கூறி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் கறவை மாடுகளுடன் அண்ணா சிலை அருகே சாலையில் பாலை ஊற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழகம், கேரளா போல புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45க்கு நிர்ணயித்து உயர்த்தி அரசு வழங்கிட வேண்டும். வெளிமாநில பால் கொள்முதலை நிறுத்தி புதுச்சேரி பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி உற்பத்தியை பெருக்க வேண்டும். கிராமக் கூட்டுறவு உற்பத்தியாளர்களுக்கு மானியத்துடன் கறவை மாட்டுக்கடன் வழங்கி புதுவையின் பால் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால், 100-க்கும் மேற்பட்ட சங்கங்கள் உடன் இணைந்து சட்டப்பேரவை அருகே தங்களின் மாடுகளுடன் சாலையில் பாலை ஊற்றி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.