
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 77 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 8000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 3,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு பாதிப்பு உயர்ந்து வருகின்றது. இன்று மட்டும் கேரளாவில் 85 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2,387 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமாக 1,045 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.