கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இந்தியாவில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், மக்களைத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களுக்கு ஊதியத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
ஊழியர்கள் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான சான்றைச் சமர்ப்பிக்கவில்லையென்றால், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி இந்தியாவில் கட்டாயமாக்கப்படவில்லை. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என மத்திய அரசு ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.