இந்திய ஜனநாயக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் மோதிக்கொள்கின்றன. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் தலைவரான ஜெயலலிதா குறித்துப் பேசியது அக்கட்சி தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைவர்கள் பாஜக மீதும், அண்ணாமலை மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர். பின்னர் இரு கட்சித் தலைவர்களையும் அழைத்து டெல்லி தலைமை பேசிய பிறகு வார்த்தைப் போர் சற்று தணிந்திருந்தது. இது தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த 18 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயகுமார், “அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை; கட்சி முடிவையே நான் சொல்கிறேன். தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பா.ஜ.க.வுக்குத் தான் பாதிப்பு. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நோட்டாவை கூட தாண்ட முடியாது. பா.ஜ.க.வுக்கு காலே இல்லை; எப்படி தமிழ்நாட்டில் காலூன்றும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் பல்வேறு அதிமுக நிர்வாகிகளும் கூட்டணி குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொது வெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. கூட்டணி நிலைப்பாட்டை அதிமுக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ள நிலையில், வேறு யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதிமுகவின் இந்த உத்தரவு மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மூலம் அதிமுகவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அதிமுகவின் மூத்தத் தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிடோர் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து டெல்லிக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் 5 பேரும் இன்று இரவு பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேச உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, அண்ணாமலை அண்ணா குறித்துப் பேசியது தொடர்பாக அதிமுக மூத்தத் தலைவர்கள் முறையிட உள்ளதாகச் சொல்லப்படுகிறது.