Skip to main content

‘இந்தியா’ கூட்டணியிலிருந்து வெளியேறும் முதல் கட்சி ஆம் ஆத்மியா?

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Aam Aadmi Party Will  be the first party to leave India's alliance

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. ஆனால் ‘இந்தியா’ கூட்டணியைப் பிரதமர் மோடியும், பாஜகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

 

இதனிடையே முதலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமாயின், டெல்லி சேவை மசோதாவிற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கூட்டணியில் ஆம் ஆத்மி தன்னை இனைத்துக்கொண்டது. அதனை ஏற்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிராக வாக்களித்தனர். இருப்பினும் டெல்லி சேவை மசோதாவிற்கு ஆதரவாகப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களைத் தெரிவித்தனர். 

 

இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் பாஜகவை வீழ்த்த வியூகங்களை வகுத்து நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க டெல்லி மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், டெல்லியில் மொத்தம் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும். அதற்குத் தீவிரமாக அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்கா லம்பா தெரிவித்திருந்தார். இதற்கு டெல்லியில் இருக்கும் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினரே போட்டியிட்டால், நாங்கள் எங்கு போட்டியிடுவது. இதுதான் கூட்டணி தர்மமா? என்று ஆம் ஆத்மி கட்சியினர் எதிர் வினையாற்றி வருகின்றனர். 

 

அந்த வகையில் காங்கிரஸின் இந்த முடிவு குறித்துப் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் சௌராஜ் பரத்வாஜ், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் இருப்பினும் அனைத்தையும் கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும்” எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், “டெல்லியில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால், நாங்கள் கூட்டணியில் தொடர்வதில் அர்த்தமில்லை என்றும், மும்பையில் அடுத்து நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து கட்சியின் மேலிடம்தான் முடிவு செய்யும்” எனக் கூறியுள்ளார்.

 

இந்த நிலையில், டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா, அல்கா லம்பாவின் கருத்தைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். “ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் போட்டியிடுவது குறித்து இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து முடிவெடுக்கும்” என்றும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்