ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று, ஆட்சியமைக்கவுள்ளது. இதனை, அக்கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்திருப்பதால் ஆம் ஆத்மியும் கொண்டாட்ட மனநிலையில் உள்ளது.
இந்த நேரத்தில், அடுத்த வருடத்தின் தொடக்கத்திலேயே குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது அடுத்தகட்ட தேர்தல் ஆட்டத்திற்கு வித்திட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் குஜராத்தில் பாஜக வெற்றியைப் பெற்றிருந்தாலும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருக்கவில்லை. இதனால் வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அப்படியொரு நிலை மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. இதற்கான நடவடிக்கையை இன்றே பாஜக துவக்கியுள்ளது. பிரதமர் மோடி இன்று சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்திற்குச் சென்ற நிலையில் அவருக்கு தொண்டர்கள், மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத்தில் பாஜகவிற்கு பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும், வரும் தேர்தலில் அங்கு ஆம் ஆத்மியும் போட்டியிட ஆயத்தமாகி வருகிறது. அண்மையில் அங்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கணிசமான வாக்குகளைப் பெற்ற நிலையில் குஜராத்திலும் ஆம் ஆத்மி கால் பதிக்க முயற்சிக்கும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், இன்றே முண்டியடித்துக்கொண்டு குஜராத்தில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது பாஜக.