மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகச் செயல்பட்டனர்.
இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டிப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது.
இந்த நிலையில்தான், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்தார். அங்கு அஜித்பவாருக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சரத் பவார், அஜித் பவார் உட்பட கட்சியில் இருந்து சென்ற எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, அஜித் பவார் தனது ஆதரவு எம்.எ.ஏக்களுடன் சரத் பவாரை நேரில் சென்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளும் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் சரத் பவாரை ஒய்.பி.சவான் மண்டபத்தில் நேரில் சென்று சந்தித்தார். பின்பு, “கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி சரத் பவாரிடம் வலியுறுத்தினோம்” என்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
இந்த நிலையில், அஜித் பவாருக்கு மேலும் 7 தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் நாகாலாந்தில் 7 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், தற்போது அந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் அஜித் பவாருக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால் சரத் பவாருக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.