கடந்த 10 நாட்களாவே வைரஸ் காய்ச்சல் பரவல் புதுச்சேரியில் அதிகமாக இருப்பதால் கடந்த 17 ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. சுகாதாரத்துறை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க பரிந்துரை செய்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படும் விகிதம் குறைந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த செய்திகள் மனநிறைவை தந்திருந்த நிலையில் தற்பொழுது புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அண்மை தகவல் வெளியாகியுள்ளது.
இன்ப்ளூயென்சா பாதிப்பு ஏற்பட்டவர்களில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேரும் ஜிப்மர் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி மருத்துவத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இந்த பன்றி காய்ச்சல் (H1N1) பாதிப்பு பரவாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.