Skip to main content

தடுப்பூசிகள் மீதான 5 சதவீத வரி தொடரும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

NIRMALA SITHARAMAN

 

அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. அனைத்து மாநில/ யூனியன் பிரதேச நிதியமைச்சர்களும் கலந்துகொண்டனர். கடந்த முறை நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தடுப்பூசிகள் உள்ளிட்டவைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வரி விலக்கு கேட்டன.

 

இருப்பினும் தடுப்பூசிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் கரோனா தடுப்பூசி மற்றும் பிற பொருட்கள் மீது ஜி.எஸ்.டி வரியை குறைப்பது குறித்து பரிந்துரைக்க ஒரு சில மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது பரிந்துரையை ஜூன் 8 ஆம் தேதி வழங்கியது.  இதனையடுத்து இன்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு கரோனா தடுப்பூசியின் மேல் விதிக்கப்பட்ட 5 ஜி.எஸ்.டி குறைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. 

 

இந்தநிலையில் இன்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு பேசியமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கரோனா தடுப்பூசிகளுக்கான ஐந்து சதவீத ஜி.எஸ்.டி தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், "அறிவித்தபடி மத்திய அரசு 75% தடுப்பூசியை வாங்கும். அதற்கான ஜிஎஸ்டியையும் செலுத்தும். ஆனால் ஜிஎஸ்டியிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் 70% மாநிலங்களுடன் பகிரப்படும்" என கூறியுள்ளார்.

 

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கருப்பு பூஞ்சைமருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்துக்கான ஜி.எஸ்.டி 12 லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார உலைகள் மற்றும் வெப்பநிலை சோதனை உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி 5% ஆகவும், ஆம்புலன்ஸ் மீதான 12% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதங்கள் அமைச்சர்கள் குழு பரிந்துரைப்படி  செப்டம்பர் இறுதிவரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மருத்துவ தர ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் / ஜெனரேட்டர்கள் (தனிப்பட்ட இறக்குமதிகள் உட்பட), வென்டிலேட்டர்கள், வென்டிலேட்டர் மாஸ்க்குகள், பைபாப் இயந்திரம், கரோனா பரிசோதனை கிட்டுகள், ஆக்சிமீட்டர் (தனிப்பட்ட இறக்குமதி உட்பட) ஆகிய பொருட்கள்மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் 12 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாகக் குறைக்கப்படுள்ளன. சானிடைஸிர் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் செப்டம்பர் இறுதிவரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்