இந்தியாவில் கரோனா முதல் அலையைவிட, இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டு கரோனா அலைகளிலும் சேர்த்து இந்தியாவில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், கரோனா இரண்டாவது அலையில் மட்டும் 594 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை எந்தெந்த மாநிலங்களில் எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பது தொடர்பான விவரத்தையும் இந்திய மருத்துவக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்கள் கரோனா இரண்டாவது அலைக்குப் பலியாகியுள்ளனர். அதற்கடுத்ததாக பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 67 மருத்துவர்களும் கரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 21 மருத்துவர்களும், புதுச்சேரியில் ஒரு மருத்துவரும் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.