பிரபலமான 5 நட்சத்திர ஓட்டலில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: அதிகாரி கைது
புதுதில்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதுகாப்பு அதிகாரி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுதில்லியில் உள்ள பிரபலமான 5 நட்சத்திர ஓட்டல் ஏரோசிட்டி. இந்த ஓட்டலில் பாதுகாப்பு பிரிவு மேலாளராக பணியாற்றி வருபவர் பவான் தாகியா. இவரோடு இங்கு பணிபுரியும் பெண் ஊழியை ஒருவர் கடந்த ஜூலை 29-ஆம் தேதியன்று ஓட்டலில் தனது பிறந்தநாளினை கொண்டாடி உள்ளார்.
அப்பொழுது பவான் தாகியா அந்த பெண்ணை தன்னுடைய அறைக்கு அழைத்து உள்ளார். அவர் உள்ளே சென்றதும், அவருடன் விளையாட்டாகப் பேசுவது போல அவருடைய சேலையை இழுத்து பாலியல் தொல்லை கொடுக்கிறார். அவர் இவ்வாறு செய்யத் துவங்கியதும், அறைக்குள் இருக்கும் மற்றொரு ஊழியர் அந்த பெண்ணிற்கு உதவுவதற்கு பதிலாக, அறையை விட்டு வெளியே செல்கிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது
முதலில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் ஊழியர் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் கொடுத்து உள்ளார். ஆனால் பவான் தாகியா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவருக்கு எச்சரிக்கை கடிதம் மட்டும் கொடுக்கப்பட்டதாக நிர்வாகம் சார்பில் பெண் ஊழியரிடம் தெரிவிக்கபட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் தற்பொழுது பவான் தாகியாவை கைது செய்துள்ளனர்.