மணிப்பூர் மாநிலத்தில் பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் அறிவித்திருந்தார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சட்டசபைக்குக் கடந்த மார்ச்சில் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் பாஜக வென்றது. பாஜக கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வென்றது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் பைரன் சிங் முதல்வராகப் பதவியேற்றார்.
அதேபோல் பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவும் கூட்டணி அமைத்து நிதிஷ்குமாரின் தலைமையில் அம்மாநிலத்தில் ஆட்சி நடைபெற்று வந்தது. சமீபத்தில், இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டு சில தினங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாகப் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறினார். ஆனால் அவரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவை விடக் குறைவான இடங்களில் வென்று இருந்ததால் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்வராகவே தொடர்ந்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 அன்று ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார், மணிப்பூரிலும் ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மணிப்பூரில் நிதிஷ்குமார் கட்சியைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி தனிக்கட்சியைத் தொடங்கி, பாஜகவுடன் இணைந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்திலும் ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து 6 பேர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.