கேரளாவில் ஓணம் பண்டிகை களை கட்டியிருக்கும் நிலையில் 43 கிலோ போதைப் பொருளுடன் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கேரளாவின் கரிப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவின் கரிப்பூர் விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது விமான நிலையத்திலிருந்து வெளியேறிய பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது வருவாய் உளவுத்துறை அதிகாரி ஒருவர் ராஜீவ்குமார் என்ற இளைஞரை பிடித்து அவருடைய உடைமைகளை பரிசோதித்ததில் 3,490 கிராம் கொக்கைன், 1,296 கிராம் ஹெராயின் உள்ளிட்ட உயர் ரக போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
போதைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ராஜீவ்குமாரை கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட போதைப் பொருளின் மதிப்பானது 43 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கென்யா நாட்டில் இருந்து ஷார்ஜா வழியாக போதைப் பொருட்களை விமானம் வழியாக கடத்தி வந்து கரிப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் விநியோகிக்க திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ராஜீவ்குமார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்த நிலையில், யார் யாருக்கெல்லாம் போதைப் பொருட்களை விநியோகிக்க வந்தார், இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.