நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான ஜி.டி.பி 5 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில் இந்திய ஜி.டி.பி 0.8 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.8 சதவீதமாக இருந்த இந்த ஜி.டி.பி, இந்த ஆண்டு 5.0 சதவீதமாக மாறியுள்ளது. இது முதல் காலாண்டை பொறுத்தவரை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான ஒன்றாகும்.
ஆட்டோமொபைல், உற்பத்தித்துறை, நிதித்துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பொருளாதார ஊக்கிகளான துறைகள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளதால் தான் இந்தியா தற்போது இந்த ஜி.டி.பி சரிவை சந்தித்துள்ளது என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பொருளாதார சரிவு மற்றும் தேக்கநிலை ஆகியவை நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களையும், மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களையும் எழுப்பியது.
இந்த நிலையில் இந்த பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக வேலைவாய்ப்பின்மை மற்றும் வங்கித்துறை நிர்வாக குளறுபடிகளை சீர்செய்வதும், வேளாண்துறைக்கு புத்துயிர் ஊட்டுவதும் தான் இந்த சரிவிலிருந்து மீள்வதற்கான வழி என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதை அதிகரிப்பதும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும் என கூறப்படுகிறது.