மேற்கு வங்கத்தில் மாபெரும் வெற்றியுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட திரிணாமூல் காங்கிரஸ், அடுத்ததாக 2023ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கவிருக்கும் பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா மாநிலத்தைக் குறிவைத்து காய்களை நகர்த்திவருகிறது. திரிபுராவில் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை அதிகாரப்பூர்வமாகவே தொடங்கி வரும் திரிணாமூல் காங்கிரஸ், ஓரிரு மாதங்களுக்கு முன்பு திரிபுராவின் முன்னாள் அமைச்சர் பிரகாஷ் சந்திர தாஸ், முன்னாள் எம்எல்ஏ சுபால் பவ்மிக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) உறுப்பினர் பன்னா தேப் உள்ளிட்ட ஏழு காங்கிரஸ் தலைவர்களை கட்சியில் இணைத்துக் கொண்டது.
அதனைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி திரிபுராவில் கட்சியை வலுப்படுத்த 'பஞ்ச பாண்டவர்' என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்தார். இந்தநிலையில் திரிபுரா பாஜக எம்.எல்.ஏவான ஆஷிஷ் தாஸ் பாஜகவில் இருந்து விலகி நாளை திரிணாமூல் காங்கிரஸில் இணையவுள்ளார். அதனையொட்டி இன்று அவர் மொட்டையடித்துக் கொண்டார். பாஜகவில் பணியாற்றியதற்குப் பிராயச்சித்தமாக மொட்டையடித்துக் கொண்டதாகவும், திரிணாமூல் காங்கிரஸில் இணைவதற்கு முன்பு தான் சுத்தமானவனாக மாற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Watch: Sitting #BJP MLA from #Tripura Surma constituency, shaving off his head as part of the atonement ‘prayischit’ prayers. He says he wants ‘suddhikaran’ before joining #TMC tomorrow pic.twitter.com/JyDAKKDHCV
— Tamal Saha (@Tamal0401) October 5, 2021
சில மாதங்களுக்கு முன்பு, திரிபுராவில் ஆளும் பாஜகவில் இருந்து ஒன்பது எம்.எல்.ஏக்களை திரிணாமூல் காங்கிரஸ் இழுக்க முயன்றதாகவும், இதனையடுத்து பாஜக தலைமை அந்த ஒன்பது எம்.எல்.ஏக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கட்சி தாவுவதைத் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல் வெளியானது இங்கே கவனிக்கத்தக்கது.